
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சார்பாய் புதூர் ஊரில் ஊறுகாய் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் முகமது உசேன்(37). இவரது கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(31). இவர்கள் இருவரும் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மேல்மலையனூர் பகுதிகளில் வெள்ளரிப் பிஞ்சுகளை மொத்தமாக வாங்கி தங்கள் கம்பெனிக்குக் கொண்டு சென்று ஊறுகாய் தயாரித்து வந்தார்கள். அதன்படி நேற்று மாலை தலைவாசல் பகுதியில் இருந்து காரில் ராஜா கேஷியர் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் முறுக்கேறி பகுதியில் தங்கள் முதலாளிக்குச் சொந்தமான பண்ணையைப் பார்த்துவிட்டு வெள்ளரிப்பிஞ்சு கொள்முதல் செய்வதற்கு முன்பணம் கொடுப்பதற்கு 30 லட்ச ரூபாய் பணத்துடன் வந்துள்ளனர்.
அவர்களது கார் மணக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். காலை 9 மணியளவில் திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் ஏரிக்கரை அருகே அவர்கள் கார் சென்று கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனத்தில் 8பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் காரை வழிமறித்தது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்தக் கும்பல் மாஸ் ஹெல்மெட் அணிந்துகொண்டு காரின் கண்ணாடியை உடைத்துள்ளது. பின்னர் மேலாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் பையில் வைத்திருந்த 30 லட்ச ரூபாயைப் பறித்துக்கொண்டு அவர்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ராஜா மற்றும் அவருடன் வந்தவர்கள் கொள்ளையர்கள் குறித்துக் கத்தி சத்தம் போட்டுள்ளனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி. நாதா, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணத்தைப் பறிகொடுத்த ராஜா மற்றும் உடன் வந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ராஜா, “உளுந்தூர்பேட்டையில் இருந்து எங்கள் காரை பைக்கில் பின் தொடர்ந்து வந்தனர். பெருமுக்கல் அருகே திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் எங்கள் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பணத்தைப் பறித்துச் சென்றனர்” என்று கூறினார். இதையடுத்து கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக போலீசார் ஆங்காங்கே திடீர் வாகன சோதனை நடத்தினர். ஆனால் நேற்று மாலை வரை கொள்ளை கும்பல் குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.