திருப்பத்தூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் வழக்கம்போல அருகில் உள்ள கிரிசமுத்திரத்தில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் எதிர்பாராத விதமாக மாணவர்கள் வந்த சைக்கிள் மீது கார் மோதியதில் பள்ளி மாணவர்கள் வெற்றி, விஜய், ரஃபிக் ஆகிய மூன்று பேரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.