திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குறிச்சி கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு 16 வயதில் தர்ஷனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் தர்ஷனாவிற்கு, சென்னையைச் சேர்ந்த 19 வயதான ஆகாஷ் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் பக்கம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தர்ஷனா காணாமல் போனார்.
இது குறித்து தந்தை நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே சமயம் குறிச்சி கோட்டையை அடுத்துள்ள மானுபட்டி என்ற இடத்தில் சாலையோரம் அமைந்துள்ள ஒரு குளத்தில் 3 பேரின் உடல்கள் மிதப்பதாக இன்று (21.12.2024) காலை பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில் காணாமல் போன தர்ஷனா, ஆகாஷ் மற்றும் 20 வயதான வயதான மாரிமுத்து எனத் தெரியவந்தது. 3 பேரின் சடலங்களும் சாலையோரம் அமைந்துள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது குளத்திற்குள் தவறி விழுந்தார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் இருந்து 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.