
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (20.03.2025) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த கே.எஸ். நரேந்திரன் நாயர் காவல்துறை தலைமையகத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தின் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எஸ். லக்ஷ்மி சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ப்ரவேஷ் குமார் சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.