திமுகவை உருவாக்கிய அண்ணா தமிழக முதல்வர் பதவியை வகித்தார். அவர் மறைவுக்கு பிறகு கலைஞர் தமிழக முதல்வரானார். அண்ணாவும், கலைஞரும் தமிழக நலனுக்காக பாடுபட்டனர். அண்ணாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா அறிவாலையம் அமைந்துள்ளது. அதே போல கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மறைந்துபோன அவருடைய சகோதரர் ராமஜெயம், இன்னோரு சகோதரர் ரவிசந்தரன் ஆகியோர் முயற்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே கரூர் ரோட்டில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டது. இதை அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் திறந்து வைத்தார்.
திமுக தலைவராக இருந்த கலைஞர் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இறந்தார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவலயத்தில் அண்ணா சிலை அருகே கலைஞர் சிலையும் அமைக்கப்பட்டது. இதே போல திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கலைஞர் சிலை அமைக்க திருச்சி மாவட்ட திமுக முடிவு செய்தது.
இதை அடுத்து கலைஞர் அறிவாலயத்தின் உள்பகுதியில் நுழைவாயிலுக்கு அருகே சிலைகள் வைப்பதற்கான நிபுணர்கள் இணைந்து மா.செ. கே.என்.நேரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து மா.செ. கே.என்.நேரு பேசுகையில், மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அண்ண, கலைஞர் ஆகியோரை போற்றும் வகையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருவருக்கும் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 8.5 அடி உயமான சிலைகள், உயரமான பீடங்கள், சிலையை சுற்றி செயற்கை நீரூற்று போன்று அமைக்கப்பட உள்ளது. சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. கட்டுமான பணிகள் துவங்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினால் வரும் மார்ச் மாதம் இந்த சிலைகள் திறக்கப்படும். திருச்சிக்கு வருகை தரும் தலைவர் ஸ்டாலின் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அண்ணா, கலைஞர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களை பார்வையிடுகிறார். என்றார்.