காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கலைச்செல்வன் தலைமையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. பெருங்குடி பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் நிலம் வரன்முறை செய்ய குன்றத்தூர் நகராட்சியை அணுகியபோது சிலர் ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முனுசாமி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நகராட்சி கமிஷனர் குமாரி மற்றும் பாலசுப்ரமணியன், ஊழியர் சாம்சன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வாங்கிய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பல மணிநேரங்களாக சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.