தேவேந்திரகுல வேளாளர் இனத்தில் உட்பிரிவு ஜாதிகளை இணைக்க கேட்டு 20 கிராம மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு.
தேர்தல் தேதி அறிவித்தாலே மக்கள் தங்களுடைய தீர்க்கப்படாத பிரச்சினைகளை வலியுறுத்தி போராடுவார்கள். அப்போது தான் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அந்த பிரச்சினைகள் என்னவென்று முழுமையாக தெரியவரும். அது பொதுத்தேர்தலாக இருந்தாலும், சரி இடைத்தேர்தலாக இருந்தாலும், தீர்க்கப்படாத பிரச்சினைக்காக மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பது என்பது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ம் தேதி நடக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் வருகிற, 30-ம் தேதி வரை நடக்கயிருக்கிறது. இந்த நிலையில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 20 கிராமங்களில் உள்ள குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், மற்றும் வாதிரியான் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அந்த மக்கள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போல் 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். அப்போது அரசு அதிகாரிகள், அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர். மேலும் அப்போது தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வசந்தகுமார், அதிமுக விஜயகுமார், அந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தனர். தேர்தல் முடிந்தும் 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் தற்போது நடக்கயிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாக அந்த 20 கிராம மக்களும் கிராமங்களில் கருப்பு கொடிகளை தோரணங்களாக கட்டி அறிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.