
கொதிக்க கொதிக்க வைக்கப்பட்டிருந்த பானி பூரி குருமாவில் விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஐந்துதலைப்புவாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேசன்-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு ரிஷி என்ற இரண்டு வயது மகன் இருந்தான். கோயம்புத்தூரில் கூலிவேலை பார்த்து வந்த முருகேசன் அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். அவரது மனைவி அனுசியா வீட்டு வாசலிலேயே பானிபூரி கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு பானி பூரிக்கு குருமா தயார் செய்த அனுசியா, அதை பெரிய பாத்திரத்தில் ஊற்றி ஆற வைத்துள்ளார். அப்பொழுது 2 வயது குழந்தை ரிஷி கொதிக்க கொதிக்க வைக்கப்பட்டிருந்த பானிபூரி குருமாவில் தவறி விழுந்துள்ளான். உடனடியாக சிறுவன் ரிஷி மீட்கப்பட்ட நிலையில், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக சிகிச்சைபெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு வயது சிறுவன் பானிபூரி குருமாவில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.