
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவரின் மகனான 8 வயது கொண்ட சிறுவன் இன்பராஜ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி மகன் 14 வயது கொண்ட தினேஷ்குமார் ஆகிய இருவரும் அக்கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது ஏரியின் சகதியில் சிக்கிக் கொண்ட இருவரும் வெளியேற முடியாமல் ஏரியில் மூழ்கினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஏரியில் மூழ்கிய சிறுவர்களை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு 2 சிறுவர்களையும் மீட்ட அக்கிராமத்தினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் 2 சிறுவர்களும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
அதன்பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அக்கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.