வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எஸ்.டி. பிரிவை சேர்ந்த 28 இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பிள்ளைகள் படிக்க, அரசு உதவிகளை பெற சாதி சான்றிதழ் கேட்டு நீண்ட காலமாக வருவாயத்துறையினரிடம் முறையிட்டு வருகின்றனர். சுமார் 14 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீ உண்மையிலேயே இருளரா, உன் மூதாதையர் யார், அவுங்க அந்த சாதிதான் என்கிறதுக்கு என்ன ஆதாரம், உங்க பூர்வீகம் எது, அங்கேயிருந்து எப்போது இங்க வந்தீங்க. இங்க வந்ததுக்கான ஆதாரம், அங்க இருந்ததுக்கான ஆதாரம் எங்கே என பலவாறு கேட்டு கடந்த 14 ஆண்டுகளாக சான்றிதழ் தரவில்லை. இதனால் பல இருளர் பிள்ளைகளின் படிப்பு வீணானது. உயர் படிப்பு படிக்க முடியாத நிலை, அரசு வேலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் நடத்திவந்தனர். கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாநில துணை செயலாளர் சிட்டிபாபுவிடம் மனு அளித்தனர். பின்னர் அந்த சமுதாய மக்களின் கோரிக்கையை மனுவாக தயாரித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாவட்ட ஆட்சியர் ராமனை சந்தித்து அம்மக்களின் சார்பில் மனு தந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுப்பற்றி விசாரியுங்கள் என வேலூர் கோட்டாச்சியருக்கு பரிந்துரை செய்தார். உடனே வருவாய்த்துறையின் விசாரணை தொடங்கி எஸ்.டி சான்றிதழ் தரலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் ராமன் 28 பேருக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கினார். கடந்த 14 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேந்தவர்கள் எங்களுக்கு உடனடியாக வாங்கி கொடுத்தனர் என்று அவர்களுக்கு ஆட்சியர் வளாகத்திலேயே நன்றி தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள், தங்களது சாதிக்காக மட்டுமே போராடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை பொய்ப்பிக்கும் வகையில் தாழ்த்தப்பட்டவர்களை விட கீழ்சாதியாக பார்க்கப்படும் இருளர்களுக்காகவும் போராடி சான்றிதழ் பெற்று தந்தது சமூக ஆர்வலர்களை பாராட்ட வைத்துள்ளது.