Skip to main content

“வன்னிய மக்களை ஏமாற்றுவதற்காக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு..” - வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி 

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

 

10.5 percent reservation to deceive the people of the Vanniyar people says Veerappan's wife Muthulatchumi

 

தமிழகத்தில் வன்னிய மக்களின் ஓட்டுகளை சட்டமன்றத் தேர்தலில் வாங்கி ஏமாற்றுவதற்காக 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று காதனி விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மகளிர் அணி தலைவியும், சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவியுமான முத்துலெட்சுமி பேசினார். அதோடு தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டனி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் முத்துலெட்சுமி உறுதிபட கூறினார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம், அம்பாத்துரை ஊராட்சி, இராமநாபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் - ரம்யா தம்பதியரின் குழந்தைகள் சன்விகா, தர்னீஷ் ஆகியோரின் காதனி விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்த வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில மகளிர் அணி தலைவியும், சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவியுமான முத்துலெட்சுமி, அங்குள்ள காளியம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ததோடு திமுக தலைமையிலான கூட்டனி வெற்றி பெற வேண்டுமென வேண்டிக்கொண்டு சிறப்பு பூஜை செய்தார்.

 

அதன் பின் விழாவில் பேசிய முத்துலெட்சுமி, “வன்னியர் சமுதாயத்தின் ஓட்டுகளை வாங்குவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோளை ஏற்று 10.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதாக பெருமையுடன் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. வன்னியர் கூட்டமைப்பு கொடுத்த வழக்கு மூலம் 20 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ராமதாஸ் வேண்டுகோளை ஏற்று 10.5 சதவீதம் வழங்கியுள்ளதாக கூறுகிறார். தேர்தலுக்குப் பின்பு எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றமாட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு கிடைக்கும். 40 வருடங்களாக வன்னிய இன மக்களுக்காக எந்த ஒரு சலுகையும் செய்யாமல், தனது குடும்பத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். வன்னிய சமுதாய இளைஞர்கள் ராமதாஸின் பேச்சையோ அல்லது அன்புமனியின் பேச்சையோ கேட்டு ஏமாறக் கூடாது. எனது கணவர் உயிரோடு இருந்தபோது ராமதாஸ் செயல்பட்ட விதம் வேறு, அவர் மறைவிற்குப் பின்னர் அவர் நடந்துகொண்ட விதம் வேறு. வன்னிய சமுதாய மக்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றால் மட்டும்தான் நம் சமுதாயம் முன்னேற முடியும். தேர்தலுக்குப் பிறகு வன்னியர் சமுதாய மக்களின் கேள்விக்கு ராமதாஸ் பதில் சொல்லும் காலம் வரும்” என்றார்.

 

இந்த  விழாவில் கலந்துகொண்ட வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த காடுவெட்டி குருவின் தங்கை செல்வி செந்தாமரை, “வன்னிய இன மக்களின் காவலாளியாக அடையாளம் காட்டப்பட்டவர் எனது அண்ணன் காடுவெட்டி குரு. பாமகவில் அன்புமணி ராமதாஸ் என்று உள்ளே நுழைந்தாரோ, அன்று முதல் எனது அண்ணன் காடுவெட்டி குருவை அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரை பாமகவிலிருந்து வெளியேற்றும் விதமாக பல சம்பவங்களை செய்தார்கள். வன்னியர் மக்களிடமிருந்து வசூல் செய்து வன்னியர் நலனுக்காக செயல்பட்ட வன்னியர் அறக்கட்டளையை ராமதாஸ் சரஸ்வதி அறக்கட்டளையாக மாற்றியபோது எனது சகோதரர் காடுவெட்டி குரு எதிர்த்து கேட்டதால் கோ.க.மணியுடன் சேர்ந்துகொண்டு அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார்கள். 

 

அதன்பின்னர் அந்த அறக்கட்டளையை ராமதாஸ் தனது பேருக்கு மாற்றிக்கொண்டார். வன்னியர் மக்களின் நலனுக்காக 40 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன் என்று கூறும் ராமதாஸ், அந்த அறக்கட்டளையை வன்னியர் அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்வாரா? வன்னியர் இடஒதுக்கீடுக்காக 2010இல் சி.என்.ராமமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்ததால் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க 2012இல் ஜனார்த்த ரெட்டி கமிஷன் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் நிலையில், 2016இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா வன்னியருக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறேன் என்று சொன்னர். ஒரு வருடத்தில் இறந்துவிட்டார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியும் வழங்கவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் அறிவிப்பு வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன் வன்னிய இன மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக எடப்பாடி பழனிசாமியும், பாமகவைச் சேர்ந்த ராமதாசும் நாடகமாடி 10.5 சதவீதம் வழங்குவதாக அறிவிப்பு வந்துள்ளது. இது பழனிசாமி மற்றும் ராமதாஸின் ஏமாற்று வேலை. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வன்னியருக்கான முழு ஒதுக்கீடு கிடைக்கும்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் பெரியசாமி, தலைவர் அந்தோனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்