Skip to main content

"பாலன் இல்லத்தில் மகனின் காலடிசுவடு..." –நிலம் கொடுத்த அமலா சங்கர் மறைவு

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
amala shankar

 

இந்திய சுதந்திரத்திற்காகவும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்தியவர்கள், நடத்தி வருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்; அப்படிப்பட்ட கட்சிக்கு தலைமை அலுவலகம் கட்ட சென்னையில் இடம் கொடுத்தவர் புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர் அமலா சங்கர்.

 

சென்னையிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கல்கத்தா போய் வசித்து வந்த அவர், தனது 101 வயதில் வயோதிகம் காரணமாக இன்று (25.7.20) கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

 

இவரது கணவர் உதயசங்கர், ஏற்கனவே இறந்து விட்டார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மேற்கு வங்கத்திலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரேனு சவுத்திரி என்பவர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம், ‘சென்னையில் அமலா சங்கரின் கணவர் உதயசங்கர் உடல் நலமில்லாமல் உள்ளார். இவர்கள் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிலம் வழங்க முடிவு செய்துள்ளார்கள். உதயசங்கரின் மருத்துவ செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளுங்கள்,’ என கூறியிருக்கிறார்.

 

Balan Illam

 

அப்போது இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம், ஏ.எஸ்.கே. ஆகியோர் மூலம் தற்போதைய ‘பாலன் இல்லம்’ இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்று வாங்கப்பட்டது. அப்போது விமான விபத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் இறந்தார் ஆகவே அவர் நினைவாக அக்கட்டிடம் பாலன் இல்லம் என்று பெயர் வைக்கப்பட்டது.

 

நீண்ட காலம் பழைய கட்டிடமாக இருந்த அங்கு கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை வரும்போதெல்லாம் வந்து பார்வையிட்டுச் செல்வார், அமலா சங்கர். அவர் அந்த கட்டடத்தை வந்து பார்வையிடுவதற்கு முக்கியக் காரணம் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான்.

 

உதயசங்கர், அமலா, சங்கர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். புகழ்பெற்ற தாகூர் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். இவர்கள் குடும்பத்தை சேர்ந்த பலரும் நாட்டின் விடுதலை போராட்டத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பணியாற்றியவர்கள். அப்படிப்பட்ட இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது, ஆண் வாரிசு.

 

தாகூர் குடும்பத்தில் ஒரு குடும்ப வழக்கம் இருந்திருக்கிறது. அது என்னவென்றால் சொந்த வீடு கட்டும்போது தங்களின் வாரிசுகளின் கால் தடத்தை அந்த வீட்டில் பதிவு செய்வார்கள். ஈரக் கலவையில் கால் தடம் பதித்து சில மணி நேரம் காய வைத்து விட்டால் அது எப்போதும் அழியாது. அப்படித்தான் தங்களின் குழந்தையின் கால் தடத்தை அந்த இல்லத்தில் பதிய வைத்திருந்தார்கள். இதில் பரிதாபகரமானது என்னவென்றால் சில ஆண்டுகளில் அவர்களின் குழந்தை இறந்து விட்டது. இதனால் வேதனையோடு வாழ்ந்த அத்தம்பதியினர் அந்த இடத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிரயம் செய்து கொடுத்த பிறகும் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறையாவது அங்கு வந்து தங்களின் குழந்தையின் கால் தடத்தை பார்த்து அதை கைகளால் தடவிக் கொடுத்து சில நிமிடங்கள் இருந்து விட்டு செல்வார்கள்.

 

கணவர் உதயசங்கர் இறப்புக்கு பிறகும் அமலா சங்கர் பாலன் இல்லம் வந்து போயுள்ளார். இப்படி தியாகமும், நினைவலைகளும் கொண்டது அந்த பாலன் இல்லம். கட்சிக்கு நிலம் கொடுத்த அமலா சங்கரின் இறப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீர வணக்கமும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்