கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி ஆகும். இது 16 கி.மீ நீளமும், 6 கி.மீ அகலமும் 48 கி.மீ சுற்றளவு கொண்டதாக உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது. இதன் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரிக்கு மேற்கு பகுதியிலும் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் கீழணையிலிருந்து வடவாறு வழியாகவும், கரவாட்டு ஓடை, செங்கால் ஓடை வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்பொழுது ஏரியின் நீர்மட்டம் 47.30 அடியாக உள்ளது. இதன் முழு கொள்ளளவு 47.5 அடியாகும்.
இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், கீழணை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர்கள் ஞானசேகர், வெற்றிவேல் ஆகியோர் விரைந்து வந்து வீராணம் ஏரியை பார்வையிட்டனர். இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 1,500 கனஅடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. வீராணம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி நிரம்பியதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள விவசாயிகள் நிம்பதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு நெற்பயிர்கள் பூ வைக்கும் நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.