வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாரளாக ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீபலட்சுமி உள்ளிட்டோர் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இதில் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 8 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் என மொத்தம் 28 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதில் சுயேட்சை வேட்பாளராக களத்தில் பிரச்சாரம் செய்து வந்தவர் கோயம்புத்தூரை சேர்ந்த நூர்முகம்மது. இவர் வேட்பு மனுதாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குதிரையில் வந்து மனுதாக்கல் செய்தார். முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து இவர் களமிறங்கியதாக கூறப்படுகிறது.
சில தினங்களாக தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தவர், திடீரென ஆகஸ்ட் 1ந்தேதி, அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை அவரது பென்ஸ்பார்க் ஹோட்டலில் சந்தித்து, நான் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்கொள்கிறேன். நான் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் எனச்சொல்லி ஆதரவு தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், இதன் பின்னால் ஏ.சி.சண்முகத்தின் முஸ்லிம் ஓட்டு திட்டம் உள்ளது என நம்மிடம் விளக்கினார்கள் அதிமுக தரப்பை சேர்ந்தவர்கள். அதில் தொகுதியில் உள்ள 3 லட்சம் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர ஏ.சி.சண்முகம் அதிமுகவுடன் இணைந்து சில திட்டங்களை வகுத்தது எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளதாக கூறுகின்றனர்.
இஸ்லாமிய வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்காகவே ஏ.சி.சண்முகம் ஏற்பாட்டில் இஸ்லாமியர்கள் சிலரை சுயேட்சைகளாக தனது ஸ்லீப்பர் செல்களாக தேர்தல் களத்தில் களமிறக்கினார் என கூறப்படுகிறது. அதில் ஓருவர் தான் இந்த நூர்முகமது. இஸ்லாமிய வாக்குகளில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிக்க முடியவில்லை என்றதும், திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் எதற்கு சுயேட்சைக்கு செல்ல வேண்டும். அது நமக்கு வரட்டுமே என திட்டமிட்டு நூர்முகமதுவை வந்து தன்னை சந்திக்க வைத்தார் ஏ.சி. சண்முகம் என்கிறார்கள். சுயேட்சைகளில் இன்னும் எத்தனை பேர் ஸ்லீப்பர் செல்களோ???