ஏற்காடு அடிவாரத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தலுக்கு 5 மாதத்திற்கு முன்பு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். 2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் அமைப்போம். அதுவரை இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பாதீர்கள்.
ஏற்காடு அடிவாரத்தில் குப்பைகளை கொட்டுகிறார்கள். கடந்த முறையும் இதைப் பற்றி பேசினேன். குப்பைகளை கொட்டுவதோடு அல்லாமல் அதை எரிக்கிறார்கள். இதில், எவ்வளவு கேன்சரை உருவாக்கும் கெமிக்கல்கள் உள்ளன. இதற்கெல்லாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். அதை இன்னும் சரி செய்யவில்லை என்றால் போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.
அங்கு குப்பைகளை கொட்டும் வாகனங்களை அனுமதிக்க மாட்டோம். திடீரென மறியல் செய்து அந்த வண்டிகளை நிறுத்தப் போகிறோம். எந்த தொகுதியில் அது வந்தாலும் போராட்டம் செய்வோம். ரோட்டிலேயே படுத்துக் கொள்வோம். பாமகவின் அடுத்த போராட்டம் அதுதான். அதை நிச்சயமாக விடப்போவது இல்லை. சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார்கள். சேலம் விமான நிலையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அப்போது தான் இப்பகுதிகள் வளர்ச்சி பெறும்” எனக் கூறினார்.