தமிழகத்தில் சில தினங்களாக கரோனா பாதிப்பு என்பது குறைந்து வரும் நிலையில், இன்று 24 ஆயிரம் என்ற அளவில் ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது இருக்கிறது. இதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா பரவல் காரணமாக அறிவித்திருந்த இரவு ஊரடங்கும் மற்றும் வார இறுதி ஊரடங்கு ஆகிய அறிவிப்புகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதேபோல் பள்ளிகள் பிப்ரவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ''நியோகோவ் என்ற புது வகையான கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளைத் திறப்பதா? கரோனா பாதிப்பு குறையாத நிலையில் பல கட்டுப்பாடுகளை ரத்து செய்திருப்பது உள்ளாட்சித் தேர்தலுக்கா? பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகளைத் திறப்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதா என அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்''' எனத் தெரிவித்துள்ளார்.