தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை, வருகின்ற ஏப்ரல் இறுதியில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான களப்பணி செய்துவருகிறது. இந்நிலையில் அதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க கட்சியின் முக்கிய அமைச்சரான ஒருவர், தன்னுடைய தொகுதியில் நிற்கலாமா வேண்டாமா என்று யோசித்து வருகிறாராம்.
அ.தி.மு.க மக்களுடன் மக்களாக இருக்கிறது. அதனால், நாங்கள் தேர்தல் நேரத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றி பெறுவோம். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். ஆனால், தி.மு.க மனதில் அந்த நம்பிக்கை இல்லை. பலவீனமாக இருப்பவர்கள்தான் தேர்தலை எப்படி அணுகுவது எனச் சந்திப்புகள், விளக்கக் கூட்டம் நடத்துவார்கள் எனப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்தான், தற்போது தன்னுடைய ராயபுரம் தொகுதியில் நிற்கலாமா, வேண்டாமா என மனக் குழப்பத்தில் இருந்து வருகிறாராம்.
அதற்கு முழுக் காரணம் மீனவர்கள் வாக்கு, சென்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை தீர்மானித்தது. ஆனால் தற்போது தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ராயபுரம் மீனவர்கள், ஆர்.கே.நகர் தொகுதிக்குள் சென்றுவிட்டதால். தற்போது, அந்த வாக்கு இங்கு இல்லை என்ற பட்சத்தில் என்ன செய்யலாம் எனத் தீர்மானித்து, மீனவ மக்கள் அதிகமுள்ள நார்கர்கோயில் அல்லது திருவொற்றியூர் கொடுத்தால் நல்லா இருக்கும் என முதல்வரிடம் கேட்டுள்ளாராம்.
அதேபோல், தன் சொந்தத் தொகுதியை விடக்கூடாது என்ற பட்சத்தில் அந்த தொகுதியையும் தன்னுடைய மகனுக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் முதல்வரிடம் பட்டும் படாமல் சொல்லியுள்ளாராம் ஜெயக்குமார். இதனால், தலைமையின் முடிவைப் பொறுத்தே இறுதி முடிவு இருக்கும் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.