சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில், இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவிலிருந்து கிளம்பினார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர், 10.30 மணியளவில் தமிழக எல்லையை வந்தடைந்தார்.
தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியுடன் வந்தால் சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக கர்நாடக எல்லையில் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடியை அகற்றாத சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீஸார் நோட்டீஸ் வழங்கினர். பின்னர் கிருஷ்ணகிரி அருகே சசிகலா, அவர் வந்துகொண்டிருந்த காரில் இருந்து இறங்கி வேறொரு காரிற்கு மாறினார். அந்த காரிலும் அதிமுக கொடியும் முன்புறம் ஜெயலலிதாவின் படமும் பொறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த டி.டி.வி. தினகரன், “கார் பழுது காரணமாகத்தான் சசிகலா கார் மாறிவருகிறார். எஸ்.ஆர்.சம்பங்கி என்பவர் அதிமுகவில் ஒன்றிய கவுன்சிலர். அவர்தான் வரவேற்பு கொடுத்தார். வரவேற்பு கொடுக்க வந்தவர் வாகனத்தில் சசிகலா சென்றுகொண்டிருக்கிறார். தற்போது சூலகிரி ஒன்றிய இளைஞர் அணி செயலாளரும் காரில் இருப்பதாகத்தான் எனக்குச் சொல்லப்பட்டது.
என் வண்டி சற்று தொலைவில் வந்ததால் அங்கு செல்ல முடியவில்லை. தற்போது, அவர் முன்னர் வந்த வாகனத்தைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பழுது சரியானதும் அந்த வண்டிக்கு மாறிவிடுவார். அமமுக நிர்வாகிகள் யாரும் அதிமுக கொடிகளைப் பிடிக்கமாட்டார்கள். இங்கு வரவேற்புக்கு வந்திருக்கும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும்தான் அதிமுக கொடியைப் பிடிக்கிறார்கள். சென்னை திரும்பியதும் ராமாபுரம் எம்.ஜி.ஆர் தோட்டத்திற்கும் போகிறோம்” என்று தெரிவித்தார்.