தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்வதற்காக நடந்த இரண்டாவது கூட்டத்திலும் ஒருமனதாக முடிவு எட்டப்படாததால் தலைவரை அறிவிக்க முடியாமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான சட்டமன்ற தலைவரைத் தேர்வு செய்துவிட்டன. ஆனால், காங்கிரசில் இன்னமும் அது இழுபறியாகவே இருக்கிறது. சட்டமன்ற தலைவர் பதவியைக் கைப்பற்ற எம்.எல்.ஏ.க்கள் விஜயதாரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், செல்வப்பெருந்தகை, முனிரத்னம் ஆகிய ஐந்து பேர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், முதல் முறை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்க முடியாமல் சோனியாகாந்தியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து தலைவரை ஒருமுகமாகத் தேர்வு செய்யவும் எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை அறியவும் மேலிடப் பார்வையாளர்களாக ராஜ்யசபாவின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே மற்றும் பாண்டிச்சேரி எம்.பி. வைத்தியலிங்கம் ஆகிய இருவரையும் நியமித்தார் சோனியா. அவர்களின் மேற்பார்வையில் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று (17.5.21) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவரைத் தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் தேர்வுக்கான படிவம் ஒன்று கொடுத்து யாரை விரும்புகிறீர்களோ அவரது பெயரை எழுதித் தரும்படி கோரப்பட்டது. அதன்படி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் விருப்பத்தை எழுதி மல்லிகார்ஜுன கார்கேயிடம் தந்தனர்.
அதனைப் பரிசீலித்து தலைவர் யார் என்பதை கார்கே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் இழுபறியா ? என்கிற சலிப்புகள் எம்.எல்.ஏ.க்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் எதிரொலிக்கச் செய்தன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சில எம்.எல்.ஏ.க்கள், “விருப்பத் தேர்வு நடைபெறவிருப்பதை அறிந்து, தலைவர் போட்டியில் இருக்கும் ஒருவர், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களை தனக்கான ஆதரவாகத் திருப்பியிருக்கிறார். அதற்கு சில உத்தரவாதம் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவரை தேர்வு செய்வதில் கட்சித் தலைவர்களுக்கும் நேர்மையான எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்தை அறிந்த கையோடு, பெரும்பான்மை ஆதரவு பெற்றிருப்பதால் அவரையே தலைவராகக் கொண்டு வரலாமா? அல்லது சோனியாவின் விருப்பத்துக்கு விட்டுவிடலாமா? என்று காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரின் கருத்துக்களைக் கேட்டிருக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே. இதனை ஒரு அறிக்கையாக சோனியாவிடம் தரவிருக்கிறார் கார்கே. அதன்பிறகே தலைவர் நியமனம் வெளிப்படையாக அறிவிக்கப்படும்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையே, நாடார் சமூக பிரமுகர் ஒருவரைத் தலைவராகக் கொண்டு வர சில பல அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் நடந்து வருவதாகவும், அதனை எதிர்க்கும் பலர், பாஜக தலைவராகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருப்பதால், காங்கிரசில் சட்டமன்ற தலைவரையாவது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்குக் கொடுக்கலாம் அல்லவா ? என்றும் காங்கிரசில் உள்ள தலித் சமூகத்தினரிடையே எதிரொலிக்கிறது.