/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/duraimurugan-art_2.jpg)
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி நடைபெற்றது . முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் . கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா” என்று பதிவிட்டிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் ஆளுநர் மாளிகையில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேலூரில் அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், “முதலமைச்சருக்கு அணவம் நல்லதல்ல என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறியிருக்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடுவது என்பது மரபு. ஆனால், ஆளுநர் என்ற ஆணவத்தினால் மரபை மாற்ற முயற்சிக்கிறார்” எனப் பதிலளித்தார். மேலும், “பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8ஆம் தேதி (08.01.2025) கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தந்தை பெரியார் குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)