Published on 25/05/2019 | Edited on 25/05/2019
17ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றியது.ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார்.இந்த நிலையில் அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு கொடுக்கப்படும் என்று அதிமுகவில் பெரிய விவாதங்கள் கிளம்பியுள்ளன. அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் அணி என்ற நிலையில் யாருடைய ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்க்களிடையே ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.
இது பற்றி விசாரித்த போது, அதிமுகவில் இருக்கும் கட்சி சீனியர்களுக்கு கொடுக்கலாம் என்று தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.அந்த வகையில் கட்சியில் சீனியர்களான தம்பிதுரை,வைத்தியலிங்கம்,கே.பி.முனுசாமி ஆகிய மூவருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகன் ஜெயவர்தனுக்கும் ராஜ்யசபா சீட் கோருவதாக சொல்லப்படுகிறது. மேலும் கூட்டணி கட்சிகளில் பாமாவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறப்பட்டது.ஆனால் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்ததால் ராஜ்ய சபா சீட் கிடைப்பதில் சந்தேகம் என்று சொல்லப்படுகிறது.அதனால் அதிமுக தலைமை பாஜகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து விட்டு,அதற்கு பதிலாக மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற பாஜக மேலிடத்தில் கேட்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.