குறையில்லாமல் ஆட்சி நடத்துவது என்பது எட்டு கோடி மக்கள் வசிக்கும் இடத்தில் சிரமமான காரியம். ஆனால், அதையெல்லாம் மீறித்தான் நமது முதல்வர் மிகச் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வருகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நமது முதல்வர் ரொம்ப நிதானமானவர். சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார். குற்றச்சாட்டுகள் இருக்கும். போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. மக்களுக்கு நன்மை செய்வதில் முதலமைச்சர் முன்னுதாரணமாக இருக்கிறார். எட்டாம் தேதி தென்காசி வருகிறார். எல்லா மாவட்டங்களுக்கும் செல்கிறார். டெல்லிக்குச் செல்கிறார். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். காலையில் எழுந்தவுடன் அவர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகளே கிடையாது.
ஆகவே அவர் ஒரு முன்னுதாரணமாகத் திகழும் பொழுது நாங்கள் எல்லாம் அவர் பின்னாடி வேலை செய்பவர்கள். நாங்களும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு திட்டமிட்ட செயல்பாடு உள்ள அரசாக இருக்கிறது. சும்மா குறைகள் சொல்லிக் கொண்டிருக்கலாம். பழமொழி கூட உண்டு 'குறை ஒன்றும் இல்லை கோவிந்தா' என்று சொல்வார்கள். அதுபோல் குறையில்லாமல் ஆட்சி நடத்துவது என்பது எட்டு கோடி மக்கள் வசிக்கும் இடத்தில் சிரமமான காரியம். ஆனால் அதையெல்லாம் மீறித்தான் நமது முதல்வர் மிகச் சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது'' என்றார்.