அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக முறைகேடு புகார்களை முன்வைத்து வருகிறார். மின்சாரத்துறையின் ரூ.4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் ஊழியர் போல் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதனை நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கெடுவிதித்து எச்சரிக்கை விடுத்தார்.
இந்தக் கெடுவுக்குப் பதிலளித்த அண்ணாமலை,'' எனக்கு கெடுவிதிக்க அவர் என்ன பிரம்மாவா? பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை அமைக்க வேண்டும். செந்தில் பாலாஜி என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தாலும், காவல்துறையை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் சந்திக்க தயார்'' என்று தெரிவித்திருந்தார்.
மேலும் சமீபத்தில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அண்ணாமலை, “நான் 20,000 புத்தகங்கள் படித்துள்ளேன்” என்று பேசியிருந்தார். இது சமூகவலைதளத்தில் பெரும் கிண்டலுக்குள்ளானது. இந்நிலையில்,கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘'பி.ஜி.ஆர். நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20,000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இப்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே சமூகவலைதளங்களில் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பில் பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு மின்வாரியம் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரிடம் குற்றச்சாட்டை வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலைக்கும், கரூர் திமுக முகமாக இருந்த செந்தில் பாலாஜிக்கும் இடையே தேர்தல் ரீதியிலான முட்டல் மோதல்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ''செந்தில் பாலாஜியைத் தூக்கிப் போட்டு மிதித்தால் பற்கள் எல்லாம் வெளியே வந்து விடும். கர்நாடக முகத்தை காட்ட வேண்டாம் என நினைக்கிறேன்'' என அண்ணாமலை பேசியிருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.