தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்கில் 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், ஈரோடு கிழக்கில் அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ. 4000 கொடுக்கப்படுவதாக அதிமுக புகார் அளித்துள்ளது. ஏற்கனவே வாக்குச்சாவடி 138, 139 ஆகிய வாக்குச்சாவடிகளில் பணப்பட்டுவாடா நடப்பதாக அதிமுக புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அன்னை சத்யா நகரில் ரூ. 4 ஆயிரம் விநியோகம் செய்யப்படுவதாகப் புகார் அளித்துள்ளது. இது குறித்து காவல்துறையிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அதிமுகவின் இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். மேலும், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நெருக்கமானவர்கள் இந்த பண விநியோகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.