Skip to main content

மேடையேற்றிய முதல்வர்... குறைகளை பட்டியலிட்ட வானதி சீனிவாசன்... கவனம் பெற்ற கோவை கூட்டம்.!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

The MLA expressed the grievances of the constituency in the presence of MK Stalin. Vanathi Srinivasan!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (22/11/2021) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூபாய் 587.91 கோடி மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்து, ரூபாய் 89.73 கோடி மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், 25,123 பயனாளிகளுக்கு ரூபாய் 646.61 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார். 

 

இந்த விழாவில், எதிர்க்கட்சி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் எதிர்க்கட்சியான அதிமுகவும், கோவை தெற்கு தொகுதியில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பாஜகவும் வென்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், இந்த அரசு நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான பாஜகவின் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். 

 

நிகழ்ச்சிக்கு வந்த அவர், கீழே அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த முதல் வரிசையில் அமர்ந்தார். அதனைக் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாக அவரை மேடைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் மேடைக்கு வந்தார். அங்கு அவருக்குத் தனி இருக்கை ஒதுக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் சில வார்த்தைகளைப் பேசச் சொல்லி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.  

 

அவர் பேசியதாவது; “ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்கள் நலத்திட்டங்களைச் செயலாற்றும்போது மக்களோடு நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு ஆக்கப்பூர்வமாகவும், வேகமாகவும் பணியாற்றினால் மாறுபட்ட கருத்துகள், மாறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள்கூட ஒருமித்த முகத்தோடு அரசுடன் இணைந்து பணியாற்ற தூண்டும். அதன்மூலம், மக்களின் நலனில் இன்னும் வேகமாக பங்குபெறலாம். 

 

அரசாங்கத்தினுடைய திட்டங்களைக் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச்செல்வேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த மக்களின் குரலாக, எங்களுடைய மனப்பூர்வமான நன்றியினை இந்த நேரத்தில் மாநிலத்தின் முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். 

 

அதேபோல், இந்த நிகழ்வு நடைபெறும் இடம் முதற்கொண்டு கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் மற்ற பகுதிகளிலும் கனமழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது தண்ணீர் தேங்கினால் பரவாயில்லை. ஆனால், சாதாரண காலங்களில் கூட மழை நீர் தேங்குகிறது. அதனால், அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதில் இன்னும் வரக்கூடிய நாட்களில் அதிக தீவிரத்துடன் இந்த அரசு இயங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்று பேசினார். அரசு விழாவில் எதிர்க்கட்சி உறுப்பினரையும் மேடையேற்றி உரையாற்ற வைத்த தமிழ்நாடு முதல்வரின் செயற்பாடு அரசியல் சூழலில் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்