Skip to main content

ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்ற தடைகோரி டிராபிக் ராமசாமி வழக்கு!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020
J. Jayalalithaa




மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தின் ஒரு பகுதி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால், அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி,  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 


அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில்,  போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும். மேலும், அந்த வீட்டைச் சோதனையிட்ட வருமான வரித் துறையினர், அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளனர்.   சோதனையின் அடிப்படையில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.  
 


ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம், நடத்திவரும் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. பல விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள அந்த வீட்டை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது.  வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் ஜூன் 8-ல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்