சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' தமிழ்நாட்டின் ஏற்றத்திற்கு பாடுபட்டவர் அண்ணா. அவருக்கு நினைவு சின்னமாக மூக்குப்பொடி டப்பாவை வைப்பீர்களா என சீமான் கேட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேக்கப் செட்டை நினைவு சின்னமாக வைப்பீர்களா எனச் சீமான் கேட்டுள்ளார். என்ன வாய்க் கொழுப்பு சீமானுக்கு. இந்த வாய்க் கொழுப்பை தயவு செய்து திமுகவிடம் காட்டுங்க, அதிமுகவிடம் காட்டாதீங்க. காட்டினால் பின் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும். அதைமட்டும் சீமானுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பிற்காலத்தில் உங்க கட்சிக்காரங்க உங்களுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் சிலோனில் சென்று ஆமைக்கறி சாப்பிட்டீங்களே அந்த ஆமையைதான் சிலையாக வைப்பார்களா? தயவு செய்து அதிமுகவுடன் விளையாட வேண்டாம்'' என்றார்.
இதற்கு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பதிலளித்துள்ள சீமான், ''எனக்கு வாய் கொழுப்புனு ஜெயக்குமார் சொன்னா அவர்களுக்கு பண கொழுப்பு. ஜெயக்குமார் மேல மரியாதை வெச்சிருக்கேன் அதை காப்பாற்றிக்கொண்டு போயிடனும். நீங்க பணம் கோடி கோடியா கொள்ளையடிச்சு வெச்சிருக்கிங்க, என்னை எதிர்த்து பேசற நீங்க பிஜேபியை எதிர்த்து பேசுவீங்களா? காலைல ரெய்டு வந்துரும். பேசுவதற்கு யாரும் இல்லை என்பதால் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதே ஸ்டாலினை எதிர்த்து பேசினால் காலையில் சோதனை வரும். தேர்தலில் தனித்து நிற்பீங்களா? தேர்தலில் தனித்து நிற்போனும்னு ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்வீர்களா? வாக்குக்கு ஒரு ரூபாய் தரமாட்டேன்னு சொல்லுவீர்களா? '' என ஆவேசமாகப் பேசினார்.