தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். சட்டமன்றத்திலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைபடி, திமுக சார்பாக மூன்று உறுப்பினர்களையும், அதிமுக சார்பாக மூன்று உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

திமுக இரண்டு உறுப்பினர்களை வேட்பாளர்களாக ஜூலை 1ம் தேதி அறிவித்தது. ஒரு இடத்தை நாடாளுமன்ற கூட்டணி ஒப்பந்தத்தின்படி வைகோவிற்கு ஒதுக்கியது. கடந்த ஜூலை 2ம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள் வைகோவை மாநிலங்களவைக்கு ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் 2009ம் ஆண்டு அன்றைய திமுக அரசு போட்ட தேசத்துரோகவழக்கு வைகோ மாநிலங்களவைக்கு செல்ல தடையாக இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் திமுக அரசு அவர்மீது தேசதுரோக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவிருக்கிறது. வைகோ மாநிலங்களவைக்கு செல்வாரா, இல்லையா என்பது இன்று வெளியாகும் தீர்ப்பின் அடிப்படையில்தான் உள்ளது.