ஈரோட்டில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "குட்கா வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேர் விடுதலையில் தடை ஏதும் இருக்காது என நம்புவதாக கூறினார்.
மேலும் அவர், "ஈரோட்டில் ம.தி.மு.க.வின் இரண்டாவது மாநாடு வருகின்ற 15ந் தேதி முப்பெரும் விழா மாநாடாக நடக்க உள்ளது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைக்க உள்ளார். அதே போல் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சரத் பவார், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, யஷ்வந்த் சின்கா, காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் திருஞாவுக்கரசர், சி.பி.எம், செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ.இரா.முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, நடிகர் சத்தியராஜ், திருமுருகன் காந்தி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சொற்பொழிவாழர்கள் பங்கேற்க உள்ளனர் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
இந்திய அரசியலில் முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல ஒரே நாடு, ஒரே மொழி என்கிற மத்திய பாசிச பா.ஜ.க.வின் நிலைபாட்டை மிக கடுமையாக எதிர்கிறோம். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிட்லரிசம் இந்திய மண்ணில் ஊடுருவ விட மாட்டோம் குறிப்பாக திராவிட இயக்கங்கள் அரண் அமைத்து அதை தடுக்கும். அதற்கு ம.தி.மு.க. தி.மு.க.வுடன் இணைந்தே கரம் கோர்த்து செல்லும்.
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வருகின்ற 10ந் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்திற்கு ம.தி.மு.க. அதரவு அளித்துள்ளோம். பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பால் அத்தியவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் பொது மக்கள் மேலும் பாதிக்கப்படுவர்.
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தை மத்திய அரசின் வழி காட்டுதல்படி மாநில அரசு நிறைவேற்றி உள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேர் விடுதலை பிரச்சினையில் ம.தி.மு.க. சார்பில் ராம்ஜெத்மலானி மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 7 பேர் விடுதலையில் எந்த தடையும் இனி இருக்காது என நம்புகிறேன். குட்கா விவகாரத்தில் ரெய்டுக்குள்ளான அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றார்.