Skip to main content

பெண் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி! பெண்களுக்கு இலவச பயண திட்டம்- பாமக நிழல் நிதிநிலை அறிக்கை

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

 


பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சென்னையில் வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

 

வரவு - செலவு


1. 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.4,74,895 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் மொத்த வருவாயை விட ரூ.2,19,065 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,08,846 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
 

2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.4,81,057 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,96,417 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் நான்கில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுவிடும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.
 

3. 2020-21 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.78,478 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.6,162 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

 

pmk



முன்னுரிமைகள்
 

4. 2020-21ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கை    

        உலகத்தர உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்குதல், வேளாண்மைக்குப் பாதுகாப்பு அளித்தல், பாசனப் பரப்பை இருமடங்காக்குதல், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல், மகளிர் பாதுகாப்பு, வறுமை ஒழிப்புக்காக ஏழைகளுக்கு நிதியுதவி, தொழில் வளர்ச்சியை அதிகரித்தல், நிர்வாக சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மை ஆகிய 10 அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து தயாரிக்கப்பட்டுள்ளது.
 

5. தமிழ்நாட்டின் இன்றைய சூழல், எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றுக்கு மேற்கண்ட  அம்சங்கள் முக்கியம் என்பதால், அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
 

புதிய உயர்கல்வி நிறுவனங்கள்
 

6. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:
 

1. அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University  Institute of Eminence - IoE) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.
 

2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம்  - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
 

3. சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
 

4. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.
 

5. ஐந்து புதிய சட்டக் கல்லூரிகள், 5 புதிய வேளாண் கல்லூரிகள் தொடங்கப்படும்.
 

6. சென்னையில் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் (IISc), கோவையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் (IISER) மத்திய அரசின் மூலமாக அமைக்கப்படும்.


7. 10 மாவட்டங்களில் மகளிர் கல்லூரிகள் தொடங்கப்படும்.
 

8. தஞ்சாவூர், நெல்லை, தருமபுரி, வேலூர் ஆகிய நகரங்களில் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் (amilnadu Institute of Postgraduate Medical Education & Research - TIPMER) அமைக்கப்படும்.
 

தமிழகத்தை உயர்கல்வி மையமாக்குதல்
 

7. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து உயர்கல்வி கற்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தை உயர்கல்வி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
 

8. தமிழ்நாட்டை உயர்கல்வி மையமாக்க இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள  திட்டங்கள் தவிர, புதிய திட்டங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.


 

வேலைவாய்ப்புப் பெருக்க திட்டம்
 

9. புதிய உயர் கல்வி நிறுவனங்கள் தொடக்கப்படுவதால், அதில் படித்து கல்விபெறுவோருக்கும். ஏற்கெனவே படித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வசதியாக வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 

10. தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்பபு ஏற்படுத்தித் தரப்படும்.
 

11. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.  
 

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை
 

12. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:
 

1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000
2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000
3. 12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000
4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000
5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000
 

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500
 

13. தமிழ்நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வறுமை ஒழிப்பு ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராக பொருளாதார வல்லுநர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
 

14. வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களை வறுமையிலிருந்து மீட்கும் நோக்குடன் அடிப்படை வருமானத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 35 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,500 கோடி செலவாகும்.
 

15. ஆதரவற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்காமலேயே மாத உதவித் தொகையாக ரூ.1500 வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், மொத்தம் 20 லட்சம் பேர் பயனடைவார்கள்.

 

மாநிலப் பொருளாதார ஆணையம்
 

16. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த மாநில திட்டக்குழு போன்று, மாநிலப் பொருளாதார ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
 

17. தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் புத்துயிரூட்டப்படும். அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
 

மது விலக்கு
 

18. தமிழ்நாட்டில் மகளிர் நாளான மார்ச் 8ஆம் தேதி முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
 

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
 

19. 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

 
20. மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்.
 

திறன்மிகு வேளாண்மைத் திட்டம்
 

21. காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக திறன்மிகு வேளாண்மைத் திட்டம் (Climate Smart Agriculture) செயல்படுத்தப்படும்.
 

22. காலநிலைக்கு ஏற்ற திறன்மிகு வேளாண்மை முறையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக வேளாண்மை, சுற்றுச்சூழல், வருவாய், நிதி ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
 

23. ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் மூலதன மானியத் திட்டத்துடன் மத்திய அரசின் மானியத்திட்டத்தையும் இணைத்துச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
 

24. தமிழகத்தில் சிறு-குறு உழவர்களுக்கு, ஏக்கருக்கு ரூ.16,000, இரண்டு ஏக்கருக்கு ரூ.26,000, மூன்று ஏக்கருக்கு ரூ.36,000, நான்கு ஏக்கருக்கு ரூ.46,000, ஐந்து ஏக்கருக்கு ரூ.56,000 வீதம் மூலதன மானியம் வழங்கப்படும். 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருக்கும் உழவர்களுக்கு அடையாள உதவியாக ரூ.20,000, இரு சம தவணைகளில் வழங்கப்படும்.
 

25. இதன் மூலம் இந்தியாவில் உழவர்களுக்கு மிக அதிக நிதியுதவி வழங்கும் மாநிலம் என்ற பெருமையையும், அனைத்து நிலை உழவர்களுக்கும் நிதியுதவி வழங்கும் மாநிலம் என்ற பெருமையையும் தமிழ்நாடு பெறுகிறது.
 

தேர்வாணையங்களில் சமூகநீதி - வெளிப்படைத்தன்மை
 

26. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி - 4, தொகுதி -2ஏ ஆகியவற்றில் நடைபெற்றது போன்ற முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்வாணைய செயல்பாடுகளில் முழு அளவில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.
 

27. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இடஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டு, சமூகநீதிக்கு துரோகம் இழைக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொரு தேர்வு அமைப்பிலும் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுவர். அவர்களில் ஒருவர் சமூக நீதியில் அக்கறை கொண்டவராக இருப்பார்.
 

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
 

28. சென்னையில் அனைத்து நகரப் பேருந்துகளிலும் அனைவருக்கும் பேருந்துப் பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு அத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

29. அடுத்தக்கட்டமாக சென்னை தவிர்த்த மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஆவடி, வேலூர், ஈரோடு, ஓசூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 14 மாநகராட்சிகளில் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.  
 

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
 

30. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவுபெறும் பள்ளிகளில் மதிய வேளையில் சத்துணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக காலை உணவும் வழங்கப்படும்.
 

31. புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், அக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்போது, தமிழ்நாட்டில் நமது கல்வி முறைக்கும், பண்பாட்டுக்கும் ஒத்துவராத அம்சங்கள் செயல்படுத்தப்படாது.
 

32. தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படாது. அதனால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் எதுவும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது.
 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
 

33. தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கும் 2020 மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்.
 

வரியில்லா வருவாய் - ரூ.2 லட்சம் கோடி
 

34. மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை என்ற பெயரில் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், வரியில்லாத வருவாயை அதிகரிக்க வேண்டிய தேவை மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. வரியில்லாத வருவாய் மூலம் நடப்பாண்டில் ரூ.2 லட்சம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

35. கனிம வளங்களை மேலாண்மை செய்தல், பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்கச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் வரியில்லாத வருவாய் இலக்கு எட்டப்படும்.
 

புதிய மாவட்டங்கள் சீரமைப்பு தொடரும்
 

36. 2019ஆம் ஆண்டில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 

37. 2020 - 21ஆம் ஆண்டில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
 

38. 12 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு மாவட்டம்  என்ற அளவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். இந்த மறுசீரமைப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 60 மாவட்டங்கள் இருக்கும்.
 

சட்டம் - ஒழுங்கு
 

39. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
 

40. தமிழ்நாட்டில்  டிஜிபி நிலை அதிகாரிகள் 15 பேர் இருக்கும் நிலையில், டிஜிபி நிலையிலான பதவி இடங்களின் எண்ணிக்கையும் 15ஆக உயர்த்தப்படும்.
 

41. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.
 

42. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.
 

43. காவல்துறையினரின் நலன்களைக் காக்க 4ஆவது காவல் ஆணையம் ஏற்படுத்தப்படும்.
 

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க தனி பிரிவு
 

44. ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதைத் தடுக்க  தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். இப்பிரிவுக்கு தமிழக காவல்துறையில் உள்ள மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைவராக நியமிக்கப்படுவார்.
 

45. மோசடித் திருமணங்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்கவும் இப்பிரிவு நடவடிக்கை எடுக்கும்.
 

கரும்பு சாகுபடிக்கு புத்துயிரூட்டும் திட்டம்
 

46. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் கடந்த 10 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 2019 - 20ஆம் ஆண்டில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 5 லட்சம் டன்னுக்கும் குறைவு ஆகும். இந்த நிலையை மாற்றி, அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
 

47. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி வரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.
 

48. சர்க்கரை ஆலைகளின் பிற கடன்களை சமாளிப்பதற்காக அவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து குறைந்த வட்டியில் தமிழக அரசு கடன் பெற்றுத்தரும்.
 

49. உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் 10% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும்.
 

6% வேளாண் வளர்ச்சி
 

50. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
 

51. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோடைக்காலங்களிலும் விவசாயம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்
 

52. கோதாவரி -காவிரி இணைப்புத்திட்டத்திற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும். இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், தேவையான அனுமதிகளைப் பெறுதல் ஆகிய பணிகளை மத்திய அரசு அடுத்த ஓராண்டிற்குள் முடிப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.
 

53. மேட்டூர் அணையின் உபரிநீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 10 பாசன ஏரிகளில் நிரப்பும் திட்டம் விரிவுபடுத்தப்படும். காவிரி, சரபங்கா - திருமணி முத்தாறு இணைப்புத்திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
 

54. 2020-21 ஆம் ஆண்டு முதல் 2023&24 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை இப்போதுள்ள 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து  50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் இலக்கு மற்றும் நோக்கம் ஆகும்.


 

pmk



சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை ரத்து
 

55. சென்னை & சேலம் எட்டுவழிச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடும்  என்பதால் உழவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அத்திட்டம் கைவிடப்படும்.
 

56. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் உடனடியாக மூடப்படும்.
 

சந்தைகளுக்கு இலவச பேருந்து
 

57. காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை சந்தைப் படுத்துவதற்கு வசதியாக, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மிகப்பெரிய அளவில் சந்தை ஏற்படுத்தப்படும்.
 

58. கிராமப்புற விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை இரவு 8 மணிக்குமேல் அரசுப் பேருந்துகளில் சந்தைகளுக்கு இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
 

59. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.
 

சுங்கக் கட்டணம்
 

60. முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை இரத்து செய்யவும், பராமரிப்பில்லாத சாலைகளில் 40% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கவும் மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.
 

61. மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும்.
 

மெட்ரோ ரயில்
 

62. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட விரிவாக்கமான வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான பாதை அடுத்த சில வாரங்களில் திறக்கப்படும்.
 

63. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்ன மாதவரம் - சிறுசேரி சிப்காட், சென்னை மாதவரம் & சோழிங்கநல்லூர், சென்னை கலங்கரை விளக்கம் - திருமழிசை ஆகிய 3 வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
 

தொடர்வண்டித் திட்டங்கள்
 

64. தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள 10 புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
 

65. சென்னை - கடலூர் பாதை, காரைக்குடி & கன்னியாகுமரி பாதை ஆகியவை அமைக்கப்பட்டு, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.


கீழடி அருங்காட்சியகம்
 

66. கீழடியில் தமிழக அரசு அமைக்க உத்தேசித்திருந்த அருங்காட்சியகம், திட்டமிடப்பட்டதைவிட பெரிதாக அமைக்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.12 கோடியிலிருந்து ரூ.25 கோடியாக உயர்த்தப்படும்.
 

கடலூர், காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி
 

67. மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 34 மருத்துவக் கல்லூரிகள் இருக்கும்.
 

68. மீதமுள்ள 7 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நடப்பாண்டில் அமைக்கப்படும்.
 

புதிய தொலைநோக்குத் திட்டம் 2025
 

69. தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த “வளரும் தமிழகத்திற்கு வலிமையான கட்டமைப்பு & 2025” என்ற பெயரில் புதிய தொலைநோக்குத்திட்டம் செயல்படுத்தப்படும்.

70. இதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி செலவிடப்படும். இதில், அரசின் பங்காக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும். மீதமுள்ள முதலீடு தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பெறப்படும்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி

71. பெண் குழந்தைகளை சுமையாக பெற்றோர் நினைக்கும் நிலையை மாற்றும் வகையில்,  2019 - 20 நிதியாண்டு முதல் சிறப்பு ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

72. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் 18ஆவது வயதில் ரூ.5 லட்சம் கிடைக்கும் வகையில் அவர்கள் பெயரில் வங்கிகளில் குறிப்பிட்ட தொகை வைப்பீடு செய்யப்படும். அதற்கான சான்றிதழ் அவர்களின் பெற்றோரிடம் வழங்கப்படும்.

வெளிப்படைத்தன்மை ஆணையம் (Transparency Commission)

73. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வெளிப்படைத்தன்மை ஆணையம் என்ற புதிய சட்டப்பூர்வ அமைப்பை தமிழக அரசு உருவாக்கும். இது தகவல் பெறும் உரிமை ஆணையத்தைவிட வலிமையான அமைப்பாக இருக்கும்.

தமிழ்நாடு பொறுப்புடைமை ஆணையம் (Tamilnadu  Accountability Commission)

74. அதிகாரிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் தங்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு பொறுப்புடைமை ஆணையம் என்ற புதிய சட்டபூர்வ அமைப்பு ஏற்படுத்தப்படும்.

75. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலோ, ஊழல் நடந்தாலோ அதற்கு சம்பந்தப்பட்டவர்களை பொறுப்பாக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் இந்த ஆணையத்தின் பணியாகும்.

நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative  Reforms Commission)

75. தமிழக அரசு நிர்வாகக் கட்டமைப்பை நிகழ்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைக்கப்படும்.

கல்லூரிகள் மூலம் ஓட்டுநர் உரிமம்

76. தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவ - மாணவியருக்கு கல்லூரிகள் மூலமாக முதலில் பழகுனர் உரிமமும், அடுத்த 6 மாதங்களில் அவர்கள் வாகனங்களை ஓட்டிப் பழகியபின்னர், ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படும்.

77. இந்த நடவடிக்கை மூலம் மாணவர்கள் மிகவும் எளிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவது மட்டுமின்றி, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வழக்கமும், விபத்துக்களும் பெருமளவில் குறையும்.

லோக் அயுக்தா

78. தமிழ்நாட்டில்  அமைக்கப்பட்டு நீதிமன்ற வழக்குகளால் முடக்கப்பட்டுள்ள லோக் அயுக்தா அமைப்பை வலுவானதாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விக் கடன்கள் தள்ளுபடி

79. தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள்

80. தமிழகத்தின் ஐந்து மண்டலங்களில் தலா ஒன்று வீதம் ஐந்து ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள் அமைக்கப்படும்.

81. தமிழ்நாட்டில் திருபெரும்புதூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான பகுதிகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக உருவெடுத்துள்ளன. அதேபோல், வேலூர் மாவட்டத்தையொட்டிய இருமாநில எல்லைகளிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லையில் உள்ள தொழில் பகுதிகளை ஒருங்கிணைந்த தொழில்மண்டலமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ஆணையரகங்கள்

82. தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு பொருளாதார ஆணையரகமாக செயல்படும்.

83. ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக செயல்படுவார்.

மின் கட்டணம் குறைப்பு

84. தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 25% குறையும்.

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்

85. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

86. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்

87. தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.  இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

88. 2020-21 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,806.98 என நிர்ணயிக்கப்படும்.

பள்ளி கல்விக்கு தனி நிதியம்

89. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

90. இதற்கு “தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி வளர்ச்சி நிதி” என பெயரிடப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த நிதிக்கு நன்கொடை வழங்கலாம். பள்ளிகள் சீரமைப்பு, தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கல்வி வளர்ச்சிப் பணிகளுக்காக இந்த நிதி செலவிடப்படும்.

பள்ளிக் கல்விக்கு ரூ.65,000 கோடி

91. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 1,000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.
 
92. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.35,000 செலவிடப்படும்.

93. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு ஊழியர் நலன்

94. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். அவற்றில் சாத்தியமானவை நிறைவேற்றப்படும்.  

95. ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த சித்திக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு, அரசின் ஆய்வில் உள்ளன. அடுத்த சில மாதங்களில் அவை செயல்படுத்தப்படும்.

96. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் படித்த இளைய தலைமுறைக்கு அரசு வேலை வழங்கப்படும்.

காலநிலை செயல்திட்டம்

97. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழக நகரங்களுக்கான காலநிலை செயல்திட்டம் (TN Urban Areas Climate Action Plan) உடனடியாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.
 

சார்ந்த செய்திகள்