கரோனா வைரஸ் தடுப்புப் பணியில், முன் களப்பணியாளர்களாக ஈடுபட்டு, வைரஸ் தொற்றால் உயிரிழந்த ஊழியர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்த ரூபாய் 50 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும், அடுத்து தொற்று உறுதியான ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை பெறுகிற வகையில் ரூபாய் 2 லட்சம் கருணை தொகையாக வழங்க வேண்டும். மேலும் இந்த கரோனா பணியில் ஈடுபடும் ஊழிர்களுக்கு உயர்தர மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் நேற்று 5ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்ட தாலுகா அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுக்க வருவாய்த் துறையில் உள்ள பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் நிதி கொடுப்பதாக தமிழக அரசு நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஊழியர்களின் போராட்டத்தால் அரசு பணிந்ததைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைக் கைவிட்டு மாநிலம் முழுக்க ஊழியர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் குமரசேன் கூறும்போது, "எங்களது சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாகவே தமிழகத்தில் கரோனா பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றால் மரணமடைந்த 28 அரசு அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூபாய்.25 லட்சம் வழங்குவதாக நேற்றிரவு அறிவிப்பு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சில அலுவலர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இது தொடர்பாக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் பெற்றுத்தரப்படும். எனவே எங்களது போராட்டத்தைக் கைவிட்டு இன்று பணிக்குத் திரும்பி உள்ளோம்."என்றார்.
அரசு என்ற செவிட்டு காதுகளுக்கு போராட்டம் என்கிற சங்கு ஊதிக் கொண்டே இருக்க வேண்டும் போல.