கர்நாடகா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வும், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் நெருக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பா.ஜ.க. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் குமாரசாமி கூட்டாகச் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார். அதில், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதை குமாரசாமியின் தந்தை தேவகவுடா மறுத்தார்.
அதனைத் தொடர்ந்து, குமாரசாமி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மேலவை உறுப்பினருமான பி.கே. ஹரிபிரசாத், முதல்வர் சித்தராமையாவையும், மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், பெங்களூரில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, குமாரசாமியின் சிங்கப்பூர் பயணம் குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் சிங்கப்பூரில் சதி திட்டம் நடத்துவதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது. சின்ன சின்ன விஷயத்திற்கு கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டிருக்கும் நபர்களை கோடியில் பேரம் பேசி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், பா.ஜ.க.வின் சதி வலையில் சுயமரியாதை உள்ள கட்சிக்காரர்கள் யாரும் விழமாட்டார்கள். நாங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அவர்கள் செய்த சதியை எப்படி முறியடிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.