தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (29/03/2021) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "பெண்களை அவமானப்படுத்திப் பேசிவரும் தி.மு.க.வைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனியைக் கண்டிக்க முடியாத தலைவர் ஸ்டாலின். பெண்களை இழிவுப்படுத்தும் தி.மு.க.வுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வென்ற கட்சி அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க தி.மு.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு சாதனை புரிந்த கட்சி அ.தி.மு.க. சட்டமன்றம் என்பது ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டிய இடம்; ஆனால் தி.மு.க.வினர் அங்கு அராஜகம் செய்தனர். அராஜகம் செய்யும் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. சிறப்பான நிர்வாகம் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.