திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற்ற தி.மு.க.வின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்த்தப்படும். மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழிப்போம். நகரங்களில் குடிசைவாழ் மக்களுக்கு 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். கிராமப்புறங்களில் 20 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு 10 ஆண்டுகளில் வழங்கப்படும்.
கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம் பெறச் செய்யப்படும். பள்ளிக்கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16%-ல் இருந்து 5% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் அமைக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், பிற தொழில் கல்வி பட்டதாரி எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி முடிவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தி.மு.க. ஆட்சிக்கு தொடக்கப்புள்ளி வைப்போம்.
உணவு தானியம், தேங்காய், கரும்பு, பருத்தி, சூரிய காந்தி உற்பத்தியில் தமிழகத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகத்தை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் நிகர பயிரிடு பரப்பை 60%-ல் இருந்து 75% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 10 லட்சம் ஹெக்டேராக உள்ள இரு போக நிலங்களை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தில் உள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்தவுடன் மீண்டும் பரப்புரையைத் தொடங்க உள்ளேன்" என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.