Skip to main content

திருவாரூர் தேர்தல் - திமுக வேட்பாளர் யார்?

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
mk

 

திமுக தலைவர் கலைஞர் காலமானதால் திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் இன்று (31-12-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

 

ஸ்டாலின்: சட்டத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சி.வி. சண்முகம்  வீராவேசமாக மிகுந்த ஆத்திரத்தோடு, கோபம் கொப்பளிக்கக்கூடிய வகையில் அவர் தந்த பேட்டியை, நானும் சில தொலைக்காட்சிகளில் பார்த்தேன். அதிலே அவர் தெளிவாக சொல்லியிருக்கின்றார். மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா  மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றது என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார். இதற்காகத் தான் அவர் மரணமடைந்த  நேரத்திலேயே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்தது, முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்திட வேண்டும் என்று நான் அன்றைக்கே தெளிவாக எடுத்துச் சொன்னேன். ஆனால், அந்த நேரத்தில் நான் விமர்சிக்கப்பட்டேனே தவிர அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. இப்பொழுது, சட்ட அமைச்சராக இருக்கக்கூடிய சண்முகம்  சொல்லியிருப்பது, சுகாதாரத் துறையினுடைய செயலாளர் இராதாகிருஷ்ணன் போலீஸ் கஷ்டடி எடுத்து அவரை விசாரித்தால் உண்மை வெளிவரும் என்று அவர் சொல்லுகின்றார். எனவே, இது சம்பந்தமாக முறையாக வழக்கு பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் போட்டு இதை விசாரணை நடத்திட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். ஆகவே, இந்த நிலையில் மீண்டும் நான் திராவிட முன்னேற்றக் கழக்த்தின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் நான் சொல்ல விரும்புவது, உடனடியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய மரணத்தில் மர்மங்கள் இருப்பதென்பது உண்மை – உண்மை – உண்மை. ஆகவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் நாட்டு மக்களுக்கு உணமைத் தெரியவரும்.

 

செய்தியாளர்: ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்துகின்ற நேரத்தில், காவல்துறை இந்த வழக்கை எடுத்து விசாணை நடத்திட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சொல்லுகின்றார். இது பற்றிய தங்களின் கருத்து?

ஸ்டாலின்: சட்டத்துறை அமைச்சரே சொல்லுகின்ற காரணத்தினால் தான் நான் மீண்டும் சொல்லுகின்றேன். இதை, சி.பி.ஐ எடுத்து விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும். ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கருத்து.

 

செய்தியாளர்: திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஸ்டாலின்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு இன்று எங்களுடைய தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்து பேசி, வருகின்ற ஜனவரி மாதம் 28-ம் தேதி திருவாரூரில் நடைபெறக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கக்கூடியவர்கள் வருகின்ற 2-ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி 3-ம் தேதி மாலை 6:00 மணி வரையில் விண்ணப்பிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பணி முடிந்ததற்குப் பிறகு மறுநாள் 4-ம் தேதி மாலை 5:00 மணியளவில் யார் யார் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்களோ அவர்களையும், மாவட்டக் கழகத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகளையும் அழைத்து, கலந்துப் பேசி அதற்குப் பிறகு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதை முடிவு செய்து, 4-ம் தேதி மாலையில் தி.மு.கழகத்தின் சார்பில் யார் போட்டியிடுகின்றார் – யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க இருக்கின்றோம்.

 

செய்தியாளர்: தி.மு.கழகத்தின் தேர்தல் வியூகம் என்பது என்னவாக இருக்கும்?

ஸ்டாலின்: வெற்றி பெறக்கூடிய அளவிற்கு எங்களுடைய வியூகம் அமையும்.

 

செய்தியாளர்: மக்களிடம் சென்று நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

ஸ்டாலின்: மக்களிடம் சொல்லுவதற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது. அதை ஒரே நிமிடத்தில் சொல்லிவிட முடியாது.

 

செய்தியாளர்: 2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது. அந்தத் தேர்தலில் யார் பலசாலி என்பதை நிரூபிக்கக்கூடிய தேர்தலாக, இந்தத் திருவாரூர் இடைத்தேர்தலை பார்க்கமுடியுமா?

ஸ்டாலின்: நாளைய தினம் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. 2019-ல் நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் வரப்போகின்றது. அந்த மாற்றத்தை இன்றைக்கு மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றார்கள். எனவே, அந்த மாற்றத்தை  வரவேற்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.  அதேபோல் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

சார்ந்த செய்திகள்