தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கிறது. இதனால், அந்தந்த கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன.
இந்நிலையில், இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கா. கண்ணன், ஜெ. செல்வம் என்கிற தமிழ்ச்செல்வன், மேல பழஞ்சநல்லூரைச் சேர்ந்த க. வரதன் ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று (10.02.2022) வியாழக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றனர் என அதில் தெரிவித்துள்ளார்.