Skip to main content

“அ.தி.மு.க.வை உடைக்கும் எண்ணத்தில் இருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது..” ரஜினியின் முடிவு குறித்து திருமாவளவன்

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

Thol thirumavalavan press meet at chidambaram

 

சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக அரசு, பொங்கலுக்கு ரூ.2,500 வழங்க அறிவித்துள்ளது. இதனை வி.சி.க. வரவேற்கிறது. அதே நேரத்தில் இதனை அ.தி.மு.க. கட்சி வழங்குவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்துவது ஊழலை விட மோசமானது. எனவே, இதனை அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 


ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்பதை வி.சி.க. வரவேற்கிறது. அவரது உடல் சார்ந்த பிரச்சனைக்காக அவர் கூறுவதை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்காததால் பி.ஜே.பி., சங்பரிவாரக் கும்பல்கள் ஏமாற்றமடைந்துள்ளது. அ.தி.மு.க.வை உடைக்கும் எண்ணத்தில் இருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் அ.தி.மு.க.வும் தற்காலிகமாக தப்பித்து உள்ளது.

 


கடலூர் மாவட்டம், அடிக்கடி புயல், மழை உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படுவதை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வரும் கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து போராடிவரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணம் அளவே வசூலிக்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் தினக்கூலி ஊழியர்களாக வேலை செய்பவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலியாக உள்ளவர்களையும் நிரந்தரமாக வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பரங்கிப்பேட்டை காட்டுமன்னார்கோவில் பகுதியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்