தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு தி.மு.க அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் அரசியலை செய்து வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். குறிப்பாக, தி.மு.க அரசால் நிறைவேற்ற முடியாத, மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில், மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ந்தேதி நடத்துகிறார்.
இந்த மாநாடு தி.மு.கவுக்கு அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியவை என்ற விமர்சனம் தி.மு.கவில் வலிமையாக எதிரொலிக்கிறது. சட்டமன்ற தேர்தலில், சீட் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காக திருமாவளவன் நடத்தும் அரசியல் என்றும், அ.தி.மு.க கூட்டணிக்கு செல்வதற்கான அரசியல் என்றும் இருவேறு விமர்சனங்கள் பொதுத் தளத்தில் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, “கொள்கை வேறு; கூட்டணி வேறு. பேர அரசியல் எங்களுக்குத் தெரியாது. தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் சிறுத்தைகளுக்கு கிடையாது” என்றெல்லாம் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், தி.மு.க சீனியர்கள் உட்பட கட்சியின் தொண்டர்கள் வரை இதை நம்ப மறுக்கின்றனர். அரசியலில் அதிகாரம்; ஆட்சியில் பங்கு என்கிற திருமாவளவனின் முழக்கம் வேறு (பழையது என்றாலும் இப்போது ட்ரண்ட் ஆகிறது) தி.மு.கவினரை கோபப்பட வைத்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பு அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த சந்திப்பு, சுமுகமாக இருந்தால் பிரச்சனை ஏதும் இல்லை. அதேசமயம், தி.மு.க கூட்டணியுடன் திருமா முரண்படுகிற சூழல் வெடித்தால், அந்த பிரச்சனையை திசைத் திருப்ப, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயத் தொடங்குகிறது என்கிற அறிவிப்பு வெளிவரலாம் என்ற தகவல் அறிவாலயத்தில் இருந்து கிடைக்கிறது.