கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலும் , 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது .அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சாதாரண மக்களும் இந்த தேர்தல் முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் .ஏனென்றால் இரண்டு பெரும் தலைவர்களான கலைஞரும் , ஜெயலலிதாவும் இல்லாத தேர்தல் என்பதால் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு எல்லாருக்கும் அதிகரித்துள்ளது.அதோடு மட்டுமில்லாமல் தினகரனின் அமமுக,சீமானின் நாம் தமிழர் கட்சி , கமலின் மக்கள் நீதி மய்யம் இவர்களின் வருகையாலும் ஓட்டுகள் பிரியும் என்பதால் தேர்தல் முடிவில் மாற்றங்கள் வரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மேலும் வரும் மே 19ஆம் தேதி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இன்று தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு செய்தி வந்து கொண்டிருக்கிறது.தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏ க்களும் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகிய நான்கு பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் அரசு தலைமை கொறடா கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . இதன் பின்னணி என்னவென்று விசாரித்த போது தேர்தலுக்கு பின் வந்த கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு பின்னடைவு உள்ளதாக உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் சென்றுள்ளதாகவும் அதனால் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்ற கணக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்க ஆளும் தரப்பு தயாராகிவிட்டது என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள். இன்னும் ஒரு சிலர் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓபிஸ், வாரணாசியில் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்தார் அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது இப்படியான திடீர் அரசியல் திருப்பங்களை தொடர்ந்து அரசியல் ஆர்வலர்கள் கவனித்து வருகின்றனர்.