யஷ்வந்த் சின்கா கட்சியில் இருந்து விலகியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராகவும் இருந்தவர் யஷ்வந்த் சின்கா. இவர் சமீபகாலமாக ஆளும் மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சித்திறன் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஆளும் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை பாஜகவில் இருந்தபடியே அவர் விமர்சித்தார்.
![Yashwant](http://image.nakkheeran.in/cdn/farfuture/Tt8sqJEgo3Ph4t7gS24-mRqoHmz4JJQXmtyYUqECEnk/1533347638/sites/default/files/inline-images/Yaswant.jpg)
இந்நிலையில், நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யஷ்வந்த் சின்கா, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இனி எந்த அரசியல் அமைப்புகளிலும் இணையப்போவதில்லை எனக்கூறிய அவர், அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், மோடியால் ஜனநாயகத்து ஆபத்து எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
![Yashwant](http://image.nakkheeran.in/cdn/farfuture/a-0SO9Kq9kcX-0lqAykQL8ODOPiD7aGo9nWCiDlxhuU/1533347622/sites/default/files/inline-images/Baluni.jpg)
யஷ்வந்த் சின்காவின் இந்த முடிவு குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் அனில் பலூனி, ‘அவர் கட்சியில் இருந்து விலகியதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. முன்னரே தெரிந்த ஒன்றுதான். அவரது சமீபத்திய பேச்சு மற்றும் எழுத்துகளே அதை உணர்த்தியுள்ளன. அவர் எங்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே காங்கிரஸ்காரரைப் போல பேசுகிறார். அவருக்கு போதுமான மரியாதையும், பதவியும் கொடுத்துமே இப்படி நடந்துகொண்டது அதிருப்திகரமானது’ என தெரிவித்துள்ளார்.