அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர்,
அம்மா ஒருமுறை சட்டமன்றத்தில் பேசியபோது, எனக்கென்று யாரும் கிடையாது, எனக்காக இருப்பவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களும், ஏழரை கோடி தமிழக மக்களும்தான் எனது குடும்பம் என பேசினார். ஆனாலும் எனக்குப்பின்னால் 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினார்.
ஆனால் தினகரன் முதல்வராவதற்கு கனவு காணுகின்றார். ஜெயலலிதா இறந்தபிறகு கொறடா மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் உள்பட நாங்கள் அனைவரும் தினகரன் வீட்டிற்கு சென்று தினகரனிடம் நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்தபிறகு பிரச்சினைகள் அதிகம் வந்துவிட்டது, ஆகையால் நீங்கள் இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள். ஓ.பி.எஸ். முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். அவரை வைத்து நாங்கள் இந்த இயக்கத்தை நடத்தி கொள்கிறோம் என்று சொன்னோம். அப்போது என்னையும், வேலுமணியையும் பார்த்து உங்கள் வீடுதேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்.
ஒரு தொகுதியில் மக்கள் ஏமாந்துவிட்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் நுழையும்போதெல்லாம் ஏமாந்த மக்கள் ரூ.20 நோட்டை காண்பித்து ரூ.20 எங்கே, 10 ஆயிரம் எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்குகூட செல்லமுடியாத சட்டமன்ற உறுப்பினர்தான் தினகரன்.
ஜெயலலிதா ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இந்த கட்சியில் உரிமைக்கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு பேசினார்.