பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் கூட்டணி சார்பாக பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதே போல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு, தமிழிசை செளந்தரராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் அல்லது புதுச்சேரி மாநிலத்தில், தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட்ட போது, திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை செளந்தரராஜன், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராகன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து , ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்கவேண்டாம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.