ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “அண்ணாமலை யாத்திரை ஆரம்பித்திருக்கிறார். பொதுவாக எல்லாருமே கடைசியில் சவ யாத்திரைதான் செல்வார்கள். அதுபோல் அண்ணாமலை பா.ஜ.க.வுக்கு சாவு மணி அடிப்பதற்கு தான் இந்த சவ யாத்திரையைத் தொடங்கி இருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதைப் போல், இது ஒரு பாவ யாத்திரை என்றுதான் சொல்ல வேண்டும். மணிப்பூரில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலியல் வன்முறைகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அதை எல்லாம் பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் வெளிநாட்டிற்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய தலைவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைகள் செய்யாமல், ஆறுதல் கூறாமல் வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிக்கும் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே, இந்த மோடியின் அரசு தூக்கி எறியப்பட வேண்டிய அரசு.
ஜெயலலிதா ஆட்சி நன்றாக இருந்தது என்று அண்ணாமலை இப்போது சொல்கிறார். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயலலிதா ஊழல் பேர்வழி என இதே அண்ணாமலைதான் கூறினார். அவரைப் பொறுத்தவரை நிரந்தரமான கருத்துகள் இல்லாதவர். பச்சோந்தி போல் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிற மனிதர்தான் அண்ணாமலை. அதனால், பாதயாத்திரை போய் அவர் நேரத்தை வீணடிப்பதை விட குற்றாலத்தில் போய் ஒரு மாதம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவர் திருந்துவார் என்று நினைக்கிறேன்.
என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருப்பதால் இன்னும் ஒரு மாத காலம் காத்திருக்கலாம். அதைவிட்டு புல்டோசர், ஜே.சி.பி. கொண்டு நிலங்களை எடுப்பது நல்லதாக தெரியவில்லை” என்று கூறினார்.