தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்திருக்கிறார். கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் சத்திய மூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார் தினேஷ் குண்டுராவ். கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் மற்றும் ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரத்தை அவரது வீட்டுக்கே சென்று சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து வந்தார் தினேஷ் குண்டுராவ்.
ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய பிரச்சனையாக மாவட்ட தலைவர்கள் மாற்றம், மாநில நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்றும், தற்போதைய மாவட்ட தலைவர்கள் பலரையும் மாற்றி விட்டு புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வலியுறுத்தியும் ஒரு பட்டியலை தினேஷிடம் தந்திருக்கிறார் அழகிரி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஞ்சய்தத், தற்போதைய மாவட்ட தலைவர்கள் யாரையும் மாற்றக்கூடாது. புதிதாக மாவட்டங்களை உருவாக்கவும் தேவையில்லை. காலியாக உள்ள மாவட்டத்துக்கு வேண்டுமானால் புதிய தலைவரை நியமிக்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாநில நிர்வாகிகள் நியமன விசயத்தில் நீங்கள் கொடுத்த பட்டியலும் இருக்கட்டும்; மற்றவர்களிடமும் பட்டியல் வாங்கி கலந்து நியமனம் செய்யலாம் என்றும் சஞ்சய்தத் சொல்லியிருக்கிறார். இதனால் அழகிரிக்கும் சஞ்சய்தத்துக்கும் இந்த விவகாரங்களில் மோதல் வெடித்திருக்கிறது.
சென்னை வந்துள்ள தினேஷ் குண்டுராவுக்கு அண்ணாசாலை அருகே உள்ள தாஜ் ஹோட்டலில் ஒரு ஷூட் புக் பண்ணப்பட்டிருக்கிறது. தவிர மேலும் 4 அறைகளும் புக் செய்துள்ளது காங்கிரஸ் தலைமை. கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் இதற்கு செலவாகும் என்கின்றனர் சத்தியமூர்த்திபவன் கதர்சட்டையினர், ராகுல்காந்தி சென்னைக்கு வந்த போதே லீ மெரிடீயனில் அவருக்காக ஒரே ஒரு ஷூட் தான் புக் பண்ணப்பட்டது. அதேபோல மேலிட பொறுப்பாளர்கள் யார் வந்தாலும் ஒரு அறைதான் வாடகைக்கு எடுப்பார்கள். இப்போது மட்டும் எதற்காக 5 அறைகள் புக் பண்ண வேண்டும் என்று கேள்விகளை எழுப்புகின்றனர். அத்துடன் இந்த விவகாரங்களை உடனே ராகுல்காந்திக்கு மெயில் தட்டிவிட்டிருக்கிறார்கள் ஹோட்டல் ரூம் ரகசியங்களை அறிந்தவர்கள்.