
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட் கடந்த 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதில், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு பேசியதாவது , “அ.தி.மு.க என்ற கட்சியே, தி.மு.கவிடம் எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதால் தான் தொடங்கப்பட்டது” என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “கணக்கு கேட்டு கட்சி தொடங்கியவர்கள், தற்போது தப்புக்கணக்கு போடுகிறார்கள்” என்று பேசினார்.
உடனடியாக எழுந்த கடம்பூர் ராஜு, “2026இல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து எங்கள் கணக்கை நாங்கள் தொடங்குவோம்” என்று பேசினார். அதன் பின்னர் சட்டமன்றத்துக்கு வந்த எஸ்.பி வேலுமணி பேசியபோது, “கணக்கு கேட்டு தொடங்கப்பட்ட கட்சி அதிமுக என்றாலும், தப்பு கணக்கு போடுவதாக சொல்கிறீர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டி கழிச்சு பார்த்தால் இந்த கணக்கு சரியாக தான் வரும்” என்று கூறினார். அதன் பிறகு பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “நீங்கள் அண்ணாவையும் மறந்துவிட்டீர்கள், உங்களுடைய அம்மாவையும் மறந்துவிட்டீர்கள்” என்றார்.
நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். இந்த சந்திப்பால், மீண்டும் அதிமுக - பா.ஜ.க கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் மறைமுக கூட்டணி கணக்கு தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.