தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூடானூர், கும்மனூர், சி.டி.பெட்டம், கொலசனஅள்ளி, கவுண்டனூர், ஏர்ரனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.
இந்த பிரசார கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் அமைய உறுதுணையாக இருப்போம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத பல திட்டங்களை அந்த கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். அவரால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியாது.
100 நாள் வேலை என்பதை மாற்றி 200 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். பாலக்கோடு பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி புதிய நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க அமைக்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பேசினார்.