
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4 ஆயிரத்து 34 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் இன்று (29.03.2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,”இன்று, தமிழ்நாட்டில் 1,600 போராட்ட தளங்களில் லட்சக்கணக்கான கிராமப்புற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பலனடையும் தொழிலாளர்களுடன் திமுக தோளோடு தோள் நின்று, மத்திய பாஜக அரசிடம் ஒரு இடி போன்ற முழக்கக் கேள்வியை எழுப்பியது. அதாவது எங்கே எங்கள் பணம்? என்று. கொளுத்தும் வெயிலில் உழைத்தவர்களுக்கு ஊதியத்திற்கான நிதியை மறுப்பது வெறும் நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல. இது கொடுமையும் ஆகும். மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்துவதை ரசிக்கும் பாஜக அரசு (Sadist BJP) வேண்டுமென்றே நிதியை நிறுத்தி வைத்து, தேர்தலில் வாக்களிக்காமல் நிராகரித்ததற்காகத் தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழைகளைத் தண்டித்து வருகிறது.
தமிழகத்திற்குச் செலுத்த வேண்டிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்ட நிதியில் நிலுவையில் உள்ள ரூ.4 ஆயிரத்து 34 கோடியை உடனடியாக விடுவிக்கவும். தமிழக மக்களுக்கு எதிரான இந்த அரசியல் வெறித்தனத்தை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாகப் பெண் தொழிலாளர் ஒருவர் தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருந்தார். அதனைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், “காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு.
உங்களுக்கு ‘வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?. வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும். மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்துவதை ரசிக்கும் பாஜக அரசின் மனம் இரங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.