ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது காரணமாக ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி தரப்பும் பல்வேறு வியூகங்களை வைத்து செயல்பட்டு வருகின்றன.
பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவின் அவை தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் தரப்பின் முக்கிய நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது வைத்தியலிங்கம் பேசுகையில், ''பொதுக்குழு உறுப்பினர்களை முன்மொழியவும், வழிமொழியவும் அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்புக்கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கப்படவும் இல்லை. அப்படியிருக்க இதர வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற உரிமையை அவை தலைவர் உசேன் தட்டிப்பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானதாகும். முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கு கூடுதலாக வாக்களிக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து முடிவு எடுக்க அவை தலைவர் தமிழ்மகன் உசேன் கட்டுப்பட்டவர். அப்படியிருக்க ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவித்தும் அவரை ஆதரிக்கிறீர்களா மறுக்கிறீர்களா கேட்டும் கடிதம் அனுப்பி இருந்தது வேட்பாளர் தேர்வு முறையாகாது. அது பொது வாக்கெடுப்பு முறையாகும். வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவது என்பது உச்சநீதிமன்றமே எதிர்பார்க்காத ஒன்று என்றால் மிகையாகாது.
இத்தகைய செயல் மூலம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறியது மட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியை அறவே புறக்கணித்துவிட்டு எடப்பாடி பிரிவின் முகவராகவே இயங்கி இருக்கிறார் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுவதில் அர்த்தம் உண்டு'' என்றார்.
தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ''நான் ஒரு பொதுக்குழு உறுப்பினர் நான் ஒரு வாக்காளர் எனக்கு யார் யார் போட்டியிடுகிறார்கள் என்று தெரிய வேண்டும். அதேபோல் நான் அளிக்கின்ற வாக்கு அது ரகசியமான வாக்கு. அதை நான் ஒருவரிடத்தில் கொடுத்தால் அந்த ரகசியம் போய் விடுகிறது. இது முறை தவறி நடக்கின்ற காரியம். இதற்கு எப்படி நாங்கள் துணை போக முடியும். நாங்கள் இன்றும் என்றும் இரட்டை இலைக்கு ஆதரவு'' என்றார்.