கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதேபோல் நாகை மாலி கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
அப்பொழுது தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் தலைவர் ஓபிஎஸ் பேசுகையில், ''சேலம் மாவட்டம் கோழிக்கால்நத்தம் வடுக்கப்பட்டி வழியாக வைகுந்தத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று இங்கு உறுப்பினர்கள் கேள்வி கேட்டு, அதற்கு அமைச்சரும் பதில் சொல்லியிருக்கிறார். முதலில் வைகுந்தத்திற்குச் சாலை அமைக்க வேண்டும் என்றால் கிருஷ்ணபரமாத்வாவிடம் இருந்து அனுமதி வரவேண்டும். அவரிடம் அனுமதி வாங்கிவிட்டீர்களா என்ற கேள்விக்கு அமைச்சர் பதில்கூற வேண்டும்'' என்றார்.
இந்த கேள்வியால் சபாநாயகர் உட்பட சபையே சிரிப்பில் ஆழ்ந்தது. இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளிக்கையில் ''மக்களின் தேவையை அறிந்து ஆக்காங்கே சாலைகள் அமைக்க வேண்டும் என்பதற்காக இந்தாண்டு ஏறத்தாழ 17 ஆயிரம் கோடி ரூபாய் முதல்வரால் ஒதுக்கப்பட்டு சாலைபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆன்மீகத்திலேயே திளைத்திருக்கும் ஓபிஎஸ் வைகுந்தத்திற்கு அனுமதிக்கப்படுமா என கேட்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஐந்தரை மணிக்கே வைகுந்தத்திற்கு வழிகாட்டும் அளவிற்கு பல பணிகளைச் செய்து வருகிறார். சிவலோகத்திற்குப் போவதாக இருந்தாலும் வைகுந்தத்திற்குப் போவதாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டுவதற்கான பணியில் சேகர்பாபு உள்ளார்'' என பதிலளித்தார்.