ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தராமலும், கட்சிப் பணிகளுக்காகச் செலவழித்த பணத்தைத் திருப்பித் தராமலும் ரூ.3 கோடி வரை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக முன்னாள் ஒ.செ.விஜயநல்லதம்பி அளித்த புகார் வழக்காகப் பதிவானது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக 5-ஆம் தேதி கர்நாடகா-ஹாசனில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
‘வானம் இடிந்து விழவா போகிறது?’ – கோபத்தின் உச்சம்!
6-ஆம் தேதி, ராஜேந்திரபாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திரபாலாஜி அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார் என, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே குறிப்பிட, நீதிபதிகள் ‘இந்த மனு விசாரணைக்கு வருவது தமிழக அரசுக்கு தெரியாதா? அவசர அவசரமாக ராஜேந்திரபாலாஜியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த விசாரணைக்கு காத்திராமல் அவசரமாக கைது செய்யாவிட்டால் வானம் இடிந்தா விழப்போகிறது? இந்தக் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர்.
இனிமேல்தான் ஹைலைட்!
ராஜேந்திரபாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியது ஏற்கத்தக்கதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வேறு சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் “முதலில் மோசடி புகாரளித்த ரவீந்திரனே, நான் ராஜேந்திரபாலாஜியை பார்க்கவே இல்லை. அவரிடம் பணம் கொடுக்கவும் இல்லை. இதையெல்லாம் பண்ணியது நல்லதம்பிதான் என்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டேட்மெண்ட் ஃபைல் பண்ணிருக்காரு. அடுத்துவரும் விசாரணையில், இதுதான் ஹைலைட். யாரால் புகார் கொடுக்கப்பட்டு பொய் வழக்கு புனையப்பட்டதோ, அவரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழக காவல்துறை மற்றும் விஜயநல்லதம்பியால் தொடுக்கப்பட்ட பொய்யான வழக்கு என்பதற்கு இது பாசிடிவாக இருக்கிறது. ராஜேந்திரபாலாஜியை மட்டும் கொடுமைப்படுத்தவில்லை. வழக்கறிஞரான என்னையும் கொடுமைப்படுத்தினார்கள். பெயில் போடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, காரணம் எதுவும் கூறாமல், என்னை ஒரு மணி நேரம் சிவகாசி காவல் நிலையத்தில் கொண்டுபோய் உட்காரவைத்தார்கள். பலரும் அழைத்துப் பேசியபிறகே, என்னை விட்டார்கள். ஒரு வழக்கறிஞரின் மொத்த உரிமையையும் திமுக அரசு தடுத்து நிறுத்தப் பார்க்கிறது. இது சர்வாதிகார ஆட்சி. பார் கவுன்சில் வரை புகார் அளித்திருக்கிறேன். இது ஒரு வழக்கறிஞருக்கான பிரச்சனை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த வழக்கறிஞர்களுக்குமான பிரச்சனை. வழக்கறிஞர்களை தொந்தரவு செய்யும் திமுக அரசைக் கண்டித்து, நீதிமன்றம் மூலம், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறியிருக்கிறார்.
ஏழைகளை ஏமாற்றும் செயல்!
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவில் ‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்து மோசடி புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையிலேயே, சட்டரீதியான நடவடிக்கைக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது, வேலைக்காகக் காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை ஏமாற்றும் செயலாகும். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகும். எனவே, இதை சாதாரணமாகக் கடந்துபோக முடியாது. தற்போதைய நிலையில், 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஏதாவது நிவாரணம் வழங்கப்பட்டால், அது வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும். அது வழக்கின் விசாரணையை பாதிக்கும். அதனால், தன் மீது பதிவான மோசடி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும், ராஜேந்திரபாலாஜி வழக்கின் போக்கை உற்றுநோக்கும் நீதித்துறை வட்டாரத்தில் “இந்த வழக்கில் அரசுத் தரப்பு ரொம்பவே சொதப்பிவிட்டது. வேண்டுமென்றால் பாருங்கள் – நாளைக்கே (10-ஆம் தேதி) ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது” என்று அடித்துச் சொல்கிறார்கள்.
ராஜேந்திரபாலாஜி விடுதலையாவாரா என்பது, மேல்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிந்துவிடும்.